Monday, December 28, 2009

"சன்" என்ற ஆக்டோபஸ் - ஒரு பார்வை

தொலைக்காட்சி மீடியா திரையுலகம் என்று அனைத்தையும் ஒரு சேர கலக்கிக்கொண்டு இருப்பது என்றால் அனைவருக்கும் தெரியும் அது சன் தொலைகாட்சி தான் என்பது. அரசியல் பலமும் திறமையும் ஒரே சேர இருந்தால் எப்படி அனைத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர்களே சிறந்த உதாரணம்.

தூர்தர்சனை மட்டுமே வறட்சியாக பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் வண்ணமயமாக சன் தொலைக்காட்சியை தொடங்கிய போது சந்தோசப்படாதவர்களே இல்லை எனலாம்.

வாரம் ஒரு முறை ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், சித்ரகார், ஞாயிற்று கிழமை ஒரு ஆதி காலத்து படம், மனைமாட்சி, ஞாயிறு மாலை ஸ்பைடர் மேன், எதிரொலி, சித்ரமாலா, ரங்கோலி என்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு சாதா சாப்பாடே எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு அதுவும் விதவிதமாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அந்த நிலை சன் தொலைக்காட்சி வந்த போது ஏற்பட்டது.

சன் தொலைக்காட்சி ஆரம்பமே அதகளமாக இருந்தது மக்களை கவர திரைப்படம் தான் முக்கிய காரணி என்பதை சரியாக உணர்ந்து அது சம்பந்தமாக அதிக நிகழ்ச்சிகளை வைத்தார்கள் (இருந்தாலும் தற்போது உள்ள அளவு இல்லை) முதலில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பு துவங்கும், அப்போது கூறியது தான் சன் தொலைக்காட்சியின் தமிழ்மாலை (மீதி நேரங்களில் திரை பாடல்கள் ஒலிபரப்பாகும்) மக்களின் தாறுமாறான வரவேற்பால் விரைவிலேயே 24 மணி நேரமாக்கினார்கள்.

கலாநிதி மாறன் மிகச்சிறந்த மார்கெட்டிங் நபர், மக்கள் எப்படி கூறினால் எதை கூறினால் ரசிப்பார்கள் என்பதை விரல் நுனியில் வைத்து இருப்பவர். இதனால் அடுத்தடுத்து பல புதிய வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுத்தார்கள் இதில் அப்போது ஜோடி பொருத்தம், பெப்சி உங்கள் சாய்ஸ் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தூர்தர்சனின் வறட்சியான செய்திகளையே பார்த்து இருந்தவர்களுக்கு சன் தொலைக்காட்சி யின் செய்திகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதற்கு இன்னொமொரு முக்கிய காரணம் அவர்களுக்கு கிடைத்த தொகுப்பாளர்கள் MJ ரெகோ, பெப்சி உமா உட்பட பலர். இவ்வாறு தொகுப்பாளர்கள் தேர்விலும் அவர்களை தங்கள் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி அவர்களின் முழு திறமையையும் பயன்படுத்திக்கொண்டார்கள். இது குறிப்பிடத்தக்க ஒன்று.

சிறந்த நடிகராக இருந்தாலும் இயக்குனர் சரி இல்லை என்றால் அவரது திறமைகள் முழுவதும் வீணடிக்கப்பட்டு விடும் என்பது போல இவர்களிடம் இருந்து மற்ற இடத்திற்கு சென்ற போது அவர்களால் அந்த அளவு ஜொலிக்க முடியவில்லை என்பதும் உண்மை. ஒருவரிடம் உள்ள திறமையை முழுவதும் பயன்படுத்துவதில் கலாநிதி மாறன் ஒரு சிறந்த நிர்வாகி. கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் பொதுமக்களை அதிகளவில் ஈர்த்தது, பெரும்பாலான வீடுகளில் சன் தொலைக்காட்சி முதல் சேனலாக தான் இருக்கும், கவனித்து பார்ப்பவர்களுக்கு தெரியும்.

தங்கள் தொழிலை சன் தொலைக்காட்சி யுடன் நிறுத்திக்கொள்ளாமல் பல சேனல்களை துவங்கினார்கள், இதில் அடுத்த மாநில சேனல்களும் அடங்கும். கலைஞர் ஆட்சியில் இருந்த போது அதிகார பலமும் உடன் இருந்ததால் அவர்களால் இன்னும் பல விஷயங்கள் எளிதாக சாதித்துக்கொள்ள முடிந்தது. மற்ற தொலைக்காட்சிகளுக்கு நெருக்கடி தரப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட விஜய் தொலைக்காட்சி செய்திகள் இதனால் நிறுத்தப்பட்டது, அந்த சமயத்தில் பலரால் விரும்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி செய்தி.

அரசியல் பலம் மட்டுமே ஒருத்தரை உயர்த்தி விட்டு விடாது என்பதற்கும் இவர்களே உதாரணம், காரணம் ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு என்ன முயற்சித்தும் சன் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை, நெருக்கடி கொடுத்தாலும் அவர்கள் அதை வேறு மாதிரி சமாளித்து தடையை தாண்டி கொண்டே இருந்தார்கள். பலம் இருந்தும் ஜெயா தொலைக்காட்சியால் சன் தொலைக்காட்சியை மிஞ்ச முடியவில்லை.

திரைப்படங்கள் மட்டும் பத்தாது பெண்களை கவர சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்கள், அது பெரிய வெற்றி பெற்றது. பெண்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு கொடுத்தனர். முன்பு இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சீரியல் வரும் பின் அது அதிகமாகி காலை மாலை என்று பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமித்து விட்டது. வெறும் சீரியல் மட்டுமே இருந்தால் மற்ற பார்வையாளர்களை இழந்து விடுவோம் என்று அவர்கள் துவங்கியது தான் சன் மூவீஸ் (தற்போது இல்லை, அது K தொலைக்காட்சி யாக மறு அவதாரம் எடுத்து இருக்கிறது), சன் மியூசிக். இதில் சுமங்கலி கேபிள் விஷனும் அடங்கும்.

கடந்த முறை தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி ஏற்ற போது அவர்கள் ஆதிக்கம் ரொம்ப அதிகரித்தது. தாங்கள் வளர்ச்சி பெற அரசியல் பலத்தை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். விஜய் தொலைக்காட்சி நமக்கு எதுக்கு வம்பு என்று முற்றிலும் ஒதுங்கி விட்டார்கள். ராஜ் தொலைக்காட்சி மண்டை காய்ந்து விட்டது.

தொழில் துறையில் பல சாதனைகளை புரிந்த டாட்டா அவர்களையே மிரட்டியதாகவும் தயாநிதி மாறன் மீது குற்ற சாட்டு உண்டு. தயாநிதி மாறனும் அண்ணனுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல, தொழில் நுட்ப துறை மட்டுமல்ல எந்த துறை கொடுத்தாலும் அதில் தனித்து தெரிவார் என்பதற்கு தற்போது ஜவுளி துறையையே எடுத்துக்காட்டாக கூறலாம். இப்படி ஒரு துறை இருப்பதையே பலர் தற்போது தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.

இவர்கள், பலரை தங்கள் அதிகாரத்தால் அடக்கியது பலருக்கு தெரியும், மார்க்கெட்டிங்கில் இவர்களை யாரும் மிஞ்ச முடியவில்லை. எடுத்துக்காட்டாக 1996 சட்டசபை தேர்தலில் கலைஞர் அரசு பெரும் வெற்றி பெற இவர்கள் சன் தொலைக்காட்சி ஒரு காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. சன் தொலைக்காட்சி பிரச்சாரம் மக்களை எளிதாக கவர்ந்தது, ஜெயா தொலைக்காட்சிக்கு அந்தளவு மக்களை கவரும் படி செய்தியை சொல்ல தெரியவில்லை.

இந்நிலையில் தினகரன் கருத்துக்கணிப்பு!!! ஒன்று நடத்தி அழகிரியை கடுப்படிக்க தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டது. இது இரு குடும்பத்திற்கும் பெரிய சண்டையை ஏற்படுத்தி விட்டது. இதனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தோசப்பட்டார்கள், நீண்ட வருடங்களுக்கு பிறகு நடு நிலையான சன் செய்தியை பார்த்தார்கள். ஜெ வைகோ விஜயகாந்த் செய்திகளும் அடிக்கடி காட்டப்பட்டன.

இடைப்பட்ட காலத்தில் கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது, சன் தொலைக்காட்சி அலுவலகம் அறிவாலயத்தில் இருந்து மாற்றப்பட்டது. சன் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு இழுக்கப்பட்டார்கள், சன் தொலைக்காட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. சன் தொலைக்காட்சி தான் அனைத்து புது படங்களையும் வாங்கி கொண்டு இருந்தது, தற்போது கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதால் அனைத்து பட உரிமையும் கலைஞர் தொலைக்காட்சிக்கு போனது குசேலன் தசாவதாரம் மற்றும் பல படங்களை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியது. இந்த கடுப்பில் குசேலனை சன் தொலைக்காட்சி ஒரு வழி ஆக்கியது தனிக்கதை.

சன் தொலைக்காட்சிக்கு படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மேலும் கடுப்பானது, இவர்களின் முக்கிய பலமே படங்கள் என்பதால் அடி மடியிலே கை வைத்ததால் இதை தாண்ட அவர்கள் எடுத்த அடுத்த முயற்சி தான் படங்களை வாங்குவது. இதை கலைஞர் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் முதன் முதலில் வாங்கி வெளியிட்ட "காதலில் விழுந்தேன்" படம் இவர்கள் செய்த விளம்பரத்தால் வெற்றி பெற விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் மிகவும் சந்தோசப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் வாங்கும் படத்தின் அளவு அதிகரித்தது, தயாரிப்பாளர்களும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வரை சரி என்று விற்று விட ஆரம்பித்து விட்டார்கள். நாம் எல்லாம் இப்போது இவர்கள் செய்யும் பட விளம்பரத்தால் நொந்து நூடுல்ஸ் ஆவதற்கு முக்கிய காரணம் கலைஞர் தொலைக்காட்சி தான் :-))))

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல இவர்கள் ராஜ் தொலைக்காட்சிக்கு செய்த பிரச்சனை எப்படியோ அது போல சன் தொலைக்காட்சி தெரியாமல் இருக்க செய்யப்பட்டது. இது செய்திகளில் முக்கிய விவாதமாக வந்தது. இவர்களுடைய சுமங்கலி கேபிள் விஷனுக்கு நெருக்கடி கொடுக்க அரசு கேபிள் கொண்டு வரப்பட்டது. இதை சமாளிக்க இவர்கள் கொண்டு வந்தது தான் சன் DTH அதுவும் இவர்கள் மார்க்கெட்டிங் தந்திரத்தால் வெற்றி பெற்றது.

நான் இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன்... எனக்கு சன் தொலைக்காட்சி மீது வேறுபட்ட கருத்துக்கள் உண்டு அதே போல இவர்கள் செய்யும் அதிகார துஸ்பிரயோகம் ஏற்று கொள்ள முடியாத ஒன்று, ஆனால் இவர்கள் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தங்களுக்கு வந்த ஒவ்வொரு தடைக்கல்லையும் சோர்ந்து போகாமல் படிக்கல்லாக மாற்றிக்காட்டியது எனக்கு ஒரு முன்மாதிரி மற்றும் மிக ஆச்சர்யம்.

பிறகு சன் தொலைக்காட்சி தன் முழு பலத்தை உபயோகித்து கலைஞர் அரசு செய்திகளை எந்த ஒளிவு மறைவில்லாமல் காண்பித்தது, இவை எல்லாவற்றையும் விட ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது. தேர்தல் வேறு வந்ததால் வேறு வழி இல்லாமல் மேலும் பிரச்சனை வளர்க்க விரும்பாமல் கலைஞர் இரு குடும்பத்தையும் சேர்த்து வைத்து தான் அரசியல் சாணக்கியர் என்பதை நிரூபித்தார்.

தற்போது தங்களை நிலை நிறுத்த மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் விளம்பரத்தில் நடுநிலையான விமர்சனம் என்று கூறுகிறார்கள் இவர்கள் படமே எப்போதும் முதல் இரண்டாம் இடங்களை பிடிக்கிறது அது மொக்கையாக இருந்தாலும். செய்திகளில் கூட தங்கள் பட விளம்பரத்தை முக்கிய செய்தியாக கூறுவது, மீடியா முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பது செய்திகளில் (தினகரன் குங்குமம் தமிழ் முரசு வானொலி) இவர்களே வியாபித்து இருக்கிறார்கள். இதனால் மக்கள் இவர்கள் சொல்வதே செய்திகள் என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். இது தவறான போக்கு. ஒருவர் கையிலே அதி முக்கியமான மீடியா இருப்பது எவருக்கும் நல்லதல்ல.

சன் குழுமம் தற்போது தாங்கள் தான் எல்லாமும் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை அவர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலகத்தையே தன் விண்டோஸ் மென்பொருளால் கட்டுப்படுத்தி வைத்து இருந்த ஆனானப்பட்ட பில் கேட்ஸ் அவர்களே ஆடி போய் இருப்பதே இதற்க்கு சரியான உதாரணம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு. நன்றி :கிரி ப்ளொக்ஸ்

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------