Monday, December 28, 2009

எண்ணத்தைச் சொல்லுகிறேன்: செம்மாழி மாநாடு - முள்வேலி முகாமுக்கு அழைப்பு உணடா?

எண்ணத்தைச் சொல்லுகிறேன்: செம்மாழி மாநாடு - முள்வேலி முகாமுக்கு
அழைப்பு உணடா?

‘தலைச்சன் பிள்ளை தவறிழைத்தால் தலைமுறையே தலைகுனியும்’ என்று
மூத்தவர்கள்
சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு குடும்பத்தின் தலைமகன்தான், அடுத்த
தலைமுறையை வழிநடத்தப்போகிறவன். அவனது பிழையால் ஏற்படுகிற பழியை
ஒட்டுமொத்த குடும்பமும் தாங்கவேண்டியிருக்கும். தவறிழைத்தவன்
துரியோதனன். ஆனால், ஒட்டு மொத்த கௌரவர்களும் அந்தப் பழியைத்
தாங்கவேண்டியிருந்தது. ‘தமிழ்த் தலைமகன்’ விருதுபெற்ற
உற்சாகத்திலிருக்கிற தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இதெல்லாம்
தெரியாததல்ல.


‘இங்கே இருக்கும் சிலர் என் மீது வெறுப்பை காட்டினாலும்...’ என்று அந்த
விருது வழங்கும் விழாவிலும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்
கருணாநிதி. ஓர் உண்மையை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இங்கேயிருக்கும்
எவரும் அவர் மீது வெறுப்பைக் காட்டவில்லை. ‘‘தலைச்சன் பிள்ளையே
தவறிழைக்கிறதே... இளைய பிள்ளைகள் கொல்லப்படுவதைத் தடுக்க
தவறிவிட்டதே.... கொல்ல உதவியவர்களுடன் ‘கை’ கோத்துக்கொண்டதே’’ என்கிற
கோபத்தோடுதான் கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்கள்
முன்வைக்கப்படுகிறதே தவிர, அவர் மீது எவருக்கும் தனிப்பட்ட வெறுப்போ,
விரோதமோ இல்லை. வேண்டாத வெறுப்புக்கும் நியாயமான கோபத்துக்கும்
வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா? முத்தமிழறிஞரே முடிவு செய்து
கொள்ளட்டும்.


கருணாநிதி அளவுக்கு தமிழில் யாராலும் வசனம் எழுத முடியாது...
கருணாநிதிபோல் எவராலும் கவிதை எழுத முடியாது... கருணாநிதிபோல்
மேடையில்
வீசும் மெல்லிய பூங்காற்றாக, கன்னித்தமிழ் உரையால் நம் உள்ளத்தை
எவராலும்
களவாட முடியாது... என்பதெல்லாம் உண்மையாகவேகூட இருக்கட்டும். அதற்காக
எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் கொன்று குவிக்கப்பட்டபோது முதல்வர்
நாற்காலியில் வீற்றிருந்த நீங்கள், என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
என்று
நாங்கள் கேட்கவே கூடாதா-? தமிழின படுகொலைக்குத் துணைபோன காங்கிரஸின்
தயவில் பதவி சுகத்தை அனுபவிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா- என்று
கோபத்துடன் எழுப்பப்படும் கேள்வியில் என்ன தவறு இருக்கிறது-?


கருணாநிதி அவர்களே! எங்களுடைய விமர்சனங்கள், எங்களுடைய குற்றச்சாட்டுகள்
எந்த உள்நோக்கமும் இல்லாதவை, நேர்மையானவை, நியாயமானவை. எங்களை நீங்கள்
நம்பலாம். இன்னும் சொல்லப்போனால் எங்களைத்தான் நீங்கள்
நம்பவேண்டும்.‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ நிலைக்கு நீங்கள்
தள்ளப்பட்டுவிடக் கூடாது.


விருது கொடுப்பவர்கள் & விழா நடத்துபவர்கள் & போற்றிப் பாடுபவர்கள் &
போஸ்டர் போடுபவர்கள் & இவர்களை நம்பியே நீங்கள் நடைபோட முடியுமா?
நியாயமான விமர்சனங்கள் கடுமையாகத்தான் இருக்கும். என்றாலும், அதுதான்
உண்மை என்பதை உணர்ந்து, செய்த தவற்றை சரி செய்ய முயன்றீர்கள் என்றால்,
ஓய்வு பெறும்முன் இன்னும் மரியாதை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதைச்
செய்யாமல், துதிபாடல்களில்தான் உங்களது மதிப்பும் மரியாதையும்
அடங்கியிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய அரசியல்
வீழ்ச்சியின் இறுதிக்கட்டம் தொடங்கியிருக்கிறது என்று அர்த்தம்.


இலக்கியத்தைப் பழுதறக் கற்ற குமரி அனந்தன், நீங்கள் ‘தமிழ்த் தலைமகன்’
விருது பெற்ற விழாவில் என்ன பேசுகிறார்? ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கலைஞரைப் பற்றி கம்பன் பாடிவிட்டான்’’ என்கிறார் இலக்கியச் செல்வர்,
‘திருக்குவளை கண்விழித்து நோக்க’ என்று கம்பன் சொன்னதாக அனந்தன்
சொல்ல... முகமலர்ச்சியுடன் நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். என்ன
செய்வது-? இப்படியெல்லாம் வாழ்த்தப்பட வேண்டுமென்ற உங்கள் விருப்பத்தை
மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.


‘‘தண்டலை மயில்கள் ஆட


தாமரை விளக்கம் தாங்க


கொண்டல்கள் முழவின் ஏங்க


குவளைகண் விழித்து நோக்க


தெண்டிரை எழினி காட்ட


தேம்பிழி மகரயாழின்


வண்டுகள் இனிதுபாட


மருதம் வீற்றிருக்கும் மாதோ’’


என்று சொன்ன கம்பனை அனந்தன் திரித்திருக்கவும் கூடாது, நீங்கள் அதை
ரசித்திருக்கவும் கூடாது. நம் இஷ்டத்துக்கு நூல்விட்டு, கம்பனை
வள்ளுவனை&
இளங்கோவையெல்லாம் காற்றில் பறக்கவிடலாமா? அந்த விழாவில் உங்களை
உச்சிக்குளிரச் செய்த இன்னொரு இலக்கியவாதி அருமை அண்ணன் வைரமுத்து,
‘உலக
மக்கள் தொகையில் தமிழுக்கு 17வது இடம், ஆட்சி மொழியில் 14ல் ஓர் இடம்,
ஜனத்தொகையில்¢ 6வது இடம், செம்மொழி ஆக்கிய பின் 5வது இடம்’
என்றெல்லாம்
புள்ளிவிவரங்களை அள்ளித்தெளித்த கவிப்பேரரசுவின் கண்களில், ‘தன் இனம்
கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டும் காணாததுபோல் கண்களை
மூடிக்கொண்டதில்
உலக அளவில் முதலிடம்’ என்கிற அப்பட்டமான உண்மை மட்டும் படாமலேயே போனது
எப்படி?


எது எப்படியோ... தமிழ்த் தலைமகன் ஆகிவிட்ட நீங்கள்தான் தலைச்சன்
பிள்ளை.
நீங்கள் எந்தத் தவறு செய்தாலும் அதற்கான பழி எங்கள் மீதும் சேர்ந்துதான்
விழும். ஒரு லட்சம் சொந்தங்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் கைகட்டி
நின்றுகொண்டிருந்ததற்கான பழியையும், பாவத்தையும் ஒட்டுமொத்த தமிழகமும்
சேர்ந்தே சுமக்கிறது. ‘நடந்த இனப்படுகொலையை தடுக்காமல் கருணாநிதி
கைகட்டிக்கொண்டிருந்தார்’ என்று சொல்லவில்லை உலகம்... ‘தமிழகம்
கையைக்கட்டிக் கொண்டிருந்தது’ என்று எங்களையும் சேர்த்துதான்
சொல்கிறது. இதைப்பற்றிய கவலையே இல்லாமல், ‘தமிழ்த் தலைமகன்’ விருதை
அவர்கள் தருகிறார்கள், நீங்கள் பெறுகிறீர்கள். ‘உலகில் எங்கெல்லாம்
தமிழன் இருக்கிறானோ, அங்கிருந்தெல்லாம் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு
வரவேண்டும்’ என்று அழைக்கிறீர்கள். அதைச் சற்றே மாற்றி ‘உலகில்
எங்கெல்லாம் தமிழன் உயிருடன் இருக்கிறானோ, அங்கிருந்தெல்லாம்
வரவேண்டும்’ என்று வேண்டுமானால் அழைப்பு விடுங்கள். நீங்களே
விரும்பினாலும் முள்ளி வாய்க்காலில் இருந்து மருந்துக்காவது ஒரு தமிழன்
வரமுடியுமா, மாநாட்டுக்கு? அதனால், நீங்கள் இப்படி அழைப்பு விடுவதுதான்
யதார்த்தமாகவும் இருக்கும், பொருத்தமாகவும் இருக்கும்.


நீங்கள் மனம் வைத்தால், ஒப்பிட இயலாத ஓர் உயர்ந்த சாதனையையும் படைக்க
முடியும். உங்களுடைய ராஜதந்திரத்தையும் அறிவாற்றலையும் பரந்த அரசியல்
தொடர்பையும் பயன்படுத்தி முயற்சி செய்வீர்கள் என்றால், முள்வேலி
முகாமிலிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களில், தமிழ்ப் புலமை கொண்டோரை
கோவை மாநாட்டுக்கு வரவழைக்க உங்களால்¢ இயலக்கூடும். அதைவிட பெரிய சாதனை
வேறெதுவும் இருக்கமுடியாது. அந்த 3 லட்சம் பேரில் தமிழ்ப் புலமை
படைத்தவர்கள் இல்லாதிருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?- அவர்களது வாழ்வுரிமையே பறிக்கப்பட்ட பிறகு
அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்குமா, கிடைக்காதா என்றெல்லாம்
விவாதிக்கப்பட்டு வருவது அபத்தம் என்பது உங்களுக்கும் தெரியும்.
அவர்களுக்கு, குறைந்தபட்சம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும்
உரிமையாவது
கிடைக்கட்டுமே.


‘தமிழராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க
உரிமை உண்டு’ என்று மீண்டும் மீண்டும் உள்ளத்தை உருக்குகிற மாதிரி
அறிக்கைவிடுகிற உங்களால் இது முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
வேண்டுமானால், ‘மாநாடு முடிந்தவுடன் அவர்களை முள்வேலி முகாமுக்குத்
திருப்பி அனுப்பிவிடுகிறோம்’ என்று எஸ்.எம்.கிருஷ்ணா மூலம் இலங்கையுடன்
ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். கச்சச் தீவு ஒப்பந்தத்தைவிட
மோசமானதாகவா அது இருந்து விடப்போகிறது?


நண்பர்களே! உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக, இந்தப் பகுதியில்
சென்றவாரம் இடம்பெற்ற கட்டுரையில் உலகத் தமிழறிஞர்களுக்கு இரண்டு
வேண்டுகோள் வைத்திருந்தேன். மாநாட்டில் ஒரு அனுதாபத் தீர்மானமும், ஓர்
கண்டன தீர்மானமும் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அது.
அந்தத்
தீர்மானங்கள் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல தவறிவிட்டதாக நண்பர்கள்
வட்டத்திலிருந்து பலமுனைத் தாக்குதல் தொடர்கிறது.


‘‘தமிழனை டாஸ்மாக்குக்கும், தமிழறிஞர்களை கோவைக்கும் அழைக்கும் தமிழக
அரசை கண்டித்து தீர்மானம் போடச் சொல்கிறீர்களா?’’ என்று அண்ணன்
சுப.வீரபாண்டியனின் தோழர் ஒருவர் கேட்டபோது, தம் பங்குக்கு அவர் ஒரு
கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது தெரிந்தது. 133 அதிகாரங்களில்
சமூகத்தையே புரட்டிப்போட முயன்ற வள்ளுவர் கோட்டத்திலிருந்து 133 வது
மீட்டரிலேயே ஒன்றுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் இருப்பதை அவர்
சுட்டிக்காட்டிய போது, வேதனையாக இருந்தது. அதில் ஒரு கடை, சென்னை&
நுங்கம்பாக்கம்& வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே
இருப்பதை நேரில் போய்ப் பார்த்தோம். டாஸ்மாக் அடித்துவிட்டு பேருந்து
நிறுத்தத்தில் விழுந்து கிடக்கும் தமிழக அரசின் வருவாய் ஆதாரங்களால்,
பயணிகள் கொஞ்சம் ஒதுங்கியே நிற்கிறார்கள்.


‘வள்ளுவருக்கு 133 அடி உயர சிலை, வள்ளுவர் கோட்டத்திற்கு அருகிலேயே
ஒன்றுக்கு இரண்டு டாஸ்மாக்’ என்பது எந்த ஊர் நியாயம்-? அப்படியொரு
கண்டனத் தீர்மானம் போடவேண்டியதுகூட அவசியம்தான். ஆனால், நான்
குறிப்பிட்ட தீர்மானங்கள் வேறு. 1. தமிழர்கள் என்பதாலேயே தமிழ்மொழி
பேசியதாலேயே கொல்லப்பட்ட ஒரு லட்சம் சொந்தங்களுக்காக ஓர் அனுதாபத்
தீர்மானம். 2. தமிழரைக் கொல்ல ஆயுதம் கொடுத்த இந்தியா முதலான அனைத்து
நாடுகளையும் கண்டித்து ஒரு கண்டன தீர்மானம். இந்த இரண்டும் கண்டிப்பாக
நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


கருணாநிதி இப்படி-யெல்லாம் தீர்மானம் நிறைவேற்ற சம்மதிப்பாரா?- என்கிற
கேள்வி நியாயமானது. ஈழப்பிரச்னையில் காங்கிரஸுடன் சேர்ந்து கள்ள மௌனம்
சாதித்தவர் அவர். இவர் அடிக்கிற மாதிரி அடித்தார். அவர்கள் அழுவது
மாதிரி
நடித்தார்கள் அதனால்தான் இவர் தந்திமேல் தந்தி கொடுத்தும் நந்தி மாதிரி
அசையாமல் நின்றுகொண்டிருந்தது காங்கிரஸ். இவரும் அவர்களது நிழலிருந்து
நகர மறுத்தார். நூறு பேர் கொல்லப்பட்டபோதே தடுத்திருக்கலாம்
தடுக்கவில்லை. ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோதும் வேடிக்கைதான்
பார்த்தார்.
பத்தாயிரம் பேர் கொல்லப்பட்ட போதும் எந்த ரியாக்ஷனும் இல்லை. அதில்
மரண
எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டது. இவர் கடிதம்
எழுதிக்கொண்டிருந்தார்.


‘அந்த தீராப் பழியை மூடிமறைக்கத்தான் செம்மொழி மாநாடு நடத்துகிறார்’
என்ற குற்றச்சாட்டு வலுவானது. எத்தனை மாநாடு நடத்தினாலும் தமிழ்
மண்ணுக்காகப் போராடி செத்த ஒரு லட்சம் சொந்தங்களை அவரால் உயிர்த்தெழ
வைக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், மேலே சொன்ன இரு
தீர்மானங்களையும் மாநாட்டில் நிறைவேற்றி தமிழையும் தமிழனையும் பற்றிய
அக்கறை தனக்கேயுரியது என்று, வழக்கம்போல் காட்ட கருணாநிதி முயலலாம்.


எண்பதுகளில் நடந்த ‘டெஸோ’ (தமிழீழ ஆதரவாளர் இயக்கம்) மாநாட்டில்
உறுதிமொழியேற்பு நிகழ்வை தானே நடத்துவதாகக் கேட்டு வாங்கிக் கொண்டவர்
கருணாநிதி. இப்போதும் இப்படி இரண்டு தீர்மானங்களை கொண்டு வரலாம் என்று
யாராவது யோசனை தெரிவித்தால், ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ பாணியில்
தீர்மானத்தை தானே முன்மொழிந்து, தானே வழிமொழிவதென்று கருணாநிதி
முடிவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


கருணாநிதியின் இந்த இன்னொரு பக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்
தமிழறிஞர்கள். அதிரடியாக ஒரு ஸ்டன்ட் எடுப்பதும், தடாலடியாக ‘யு’ டர்ன்
அடிப்பதும் அவருக்குப் புதிதல்ல. ‘ஜனநாயகக் கொலையாளி இந்திராவே
திரும்பிப்போ’ என்ற முழக்கம் ஓய்வதற்குள், ‘நேருவின் மகளே வருக நிலையான
ஆட்சி தருக’ என்று தடாலடியாக அறிவித்தவர்தான் கருணாநிதி. அதே மாதிரி ஒரு
மாற்றத்தை செம்மொழி மாநாடு ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


எனவே, இந்த இரண்டு தீர்மானங்களையும் கருணாநிதிக்கு முன்னதாகவே இ மெயில்
வாயிலாக அனுப்பி வைக்க தமிழறிஞர்கள் முன்வரவேண்டும். வருவார்களா-?

புகழெந்தி தங்கராஜ்

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------