பிரம்மாண்ட படங்கள் என்று என்னை வாயை பிளக்க வைத்தவர்கள் (கொசு போனா கூட தெரியாது போல) இரண்டு பேர், ஒன்று ஸ்பீல் பெர்க் இரண்டாவது தற்போதைய ஹாட் அண்ணன் பிரம்மாண்ட மன்னன் ஜேம்ஸ் கேமரூன். யோவ்! உங்களோட கற்பனை திறனக்கு அளவே இல்லையா! என்று நம்மை தலை சுத்த வைப்பவர்கள். இதில் தற்போதைய நாயகன் ஜேம்ஸ் கேமரூன் படமான "அவதார்" பற்றி பார்க்க போகிறோம்.
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு இவரிடமே சரியான விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் போல..அந்த அளவிற்கு படமுழுக்க அசரடித்து இருக்கிறார். 12 வருட உழைப்பு மற்றும் கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது, நினைத்தாலே கண்ணை கட்டுகிறது. ஒருவர் தன் மீது எவ்வளோ தூரம் நம்பிக்கை வைத்து இருந்தால் இவ்வ்வ்ளோ காலம் உழைத்து இவ்வ்வ்வவளோ செலவு செய்து படம் எடுப்பார்! உண்மையில் இவர் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இவருடைய கடைசி படம் "டைட்டானிக்", அந்தப்படம் வெளிவந்து 11 வருடம் ஆகிறது, அந்தப்படத்தின் பிரம்மாண்டமே இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை..இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா! என்று ஆச்சர்யப்படுத்தி இருந்தார். அதை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இன்னொரு படம் இது என்றால் என்னவென்று சொல்வது!
இனி "அவதார்"
வேற்று கிரகம் ஒன்றில் விலைமதிக்க முடியாத கனிமங்கள் உள்ளதை கண்டு பிடிக்கிறார்கள், அங்கு "நவி" என்ற இனத்தினர் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நம்மை போல இல்லாமல் மிகவும் உயரமாகவும், காதுகள் நீளமாகவும் மூக்கு வால் உடல் அமைப்பு என்று அனைத்தும் வித்யாசமாக இருக்கிறார்கள்.
இவர்கள் நவி இனத்தவரை போல ஒரு க்ளோனிங் நவியை உருவாக்கி அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள அனுப்புகிறார்கள், இதற்கு ஜேக் என்பவர் தேர்வு செய்யப்படுகிறார். இவருடைய உடல் இங்கே இருக்கும் ஆனால் உயிர் மற்றும் எண்ணங்கள் அனைத்தும் புதிதாக இவர்களால் உருவாக்கப்பட்ட நவியிடம் இருக்கும். எப்போது வேண்டும் என்றாலும் இவர்கள் நினைத்தால் இவர்கள் உருவாக்கிய நவியை (ஜேக்கை) செயல் இழக்க செய்யலாம், அனைத்து கட்டுப்பாடுகளும் இவர்கள் வைத்து இருப்பார்கள். ஏதாவது ஒரு உடல் தான் ஏக்டிவாக இருக்க முடியும்.
சுருக்கமாக நம்ம முறையில் கூறினால் "கூடு விட்டு கூடு பாய்வது" போலவாகும்.
இவ்வாறு நவியாக செல்லும் ஜேக் ஆபத்தில் மாட்டிக்கொள்ள அங்கு நவி இனப்பெண் வந்து இவரை காப்பாற்றுகிறார், பின் இவரின் தைரியத்தால் கவரப்பட்டு இவரை தங்கள் கூட்டத்திற்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்துகிறார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜேக் இவர்களுடைய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள அனுமதிக்கின்றனர்.
ஜேக் நவி இனத்தவரின் அனைத்து பழக்கங்களையும் கற்றுக்கொள்கிறார், அவர்களுள் ஒருவராகிறார். இடையே தங்கள் குழுவிற்கு இந்த இடங்களை பற்றிய தகவல்களையும் அனுப்பி வைக்கிறார். இவர் தந்த விவரங்களை வைத்து அங்கு படையெடுத்து வந்து அனைவரையும் அழிக்க முடிவு செய்கிறார்கள். அங்கு பெண்கள் குழந்தைகள் பலர் இருப்பதாலும் அவர்கள் ரொம்ப மென்மையானவர்கள் யாருக்கும் தொந்தரவு தராதவர்கள் என்பதால் இதற்கு ஜேக் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், ஆனால் இதற்கு மேலிடம் ஒத்துக்கொள்ளாமல் முதல் கட்ட தாக்குதலில் அவர்களுடைய ஒரு பகுதியை அழித்து விடுகிறார்கள்.
இரண்டாவது கட்ட பிரம்மாண்ட தாக்குதலுக்கு தயாராகின்றனர், இதை ஏற்றுக்கொள்ளாத ஜேக் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி சென்று நவி இனத்தவருக்கு உதவ முடிவு செய்கின்றனர். இறுதியில் அவர்கள் (ஜேக்) அந்த இனத்தினரோடு சேர்ந்தார்களா! நவி இனத்தவர் உள்ள "பண்டோரா" காட்டை காப்பாற்றினார்களா! ஜேக் என்ன ஆனார் என்பதை நம்மை இருக்கை நுனிக்கு வரவைத்து பட்டயகிளப்பி இருக்கிறார்கள்.
படத்தின் சுவாராசியங்கள் சில
இந்த படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் சி ஜி எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள். சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் எவரும் நம்ப மாட்டார்கள் இவை அனைத்தும் கிராபிக்ஸ் என்றால், அந்த அளவிற்கு தாறுமாறாக இருக்கிறது.
இதில் வரும் போர் விமானங்கள் டிராகன்கள் மற்றும் சில மிருகங்கள் இவர்களின் கற்பனையின் உச்சம், ஏம்பா! நீங்கெல்லாம் மனுசங்க தானா! இல்ல தெய்வமா! என்று கேட்கத் தோன்றுகிறது, அந்த அளவிற்கு............ நீங்களே பார்த்து முடிவு செய்யுங்களேன்.
ஜேக்கும் அவரை காப்பாற்றும் நவி பெண்ணும் காதலிக்கிறார்கள் அதை மிக இயல்பாக ரசிக்கும் படி எடுத்து இருப்பது அருமை
நம்ம ஊர்ல குதிரையை அடக்குனா வீரன் என்கிற மாதிரி இங்க டிராகனை அடக்க வேண்டும்.. ஒரு பிரம்மாண்டம் வேண்டாமா! :-) இதற்காக ஜேக் முயற்சிக்கிறார் ஒரு டிராகனுடன்..அவரை பிடிக்காத அல்லது இன்னும் முழுதாக ஏற்றுக்கொள்ளாத மற்ற நவிக்கள் இவர் திணறுவதை பார்த்து கெக்கே பிக்கே என்று சிரிக்க, நம்ம ஆளு தான் ஹீரோ ஆச்சே விடுவாரா! அதை அசத்தலாக கட்டுப்படுத்தி தன் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகிறார். இப்படி செய்து விட்டால் அந்த டிராகன் அவர் வீட்டு நாய்க்குட்டி மாதிரி அவர் சொன்னதெல்லாம் கேட்கும்..இது எப்படி இருக்கு! சூப்பரா! :-) இது மாதிரி ஆளுக்கொரு டிராகன் வைத்து இருப்பார்கள்.
இதில் ஒரு காண்டா மிருகம் (ஆமா! இதை மட்டும் ஏன் மிருகம் என்று கூறுகிறார்கள், காண்டா விலங்கு என்று கூறக்கூடாதா, சரி நீங்க காண்டாகிடாதீங்க! :-D) மாதிரி ஒன்று (பல) இருக்கும், மவனே! அது ஓடி வந்துதுன்னு வைங்க.. அந்த இடமே ரணகளமே தான்.... கடைசி சண்டையில் இவை எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிட்டு ஓடி வரும் பாருங்க! நம்ம ஆளுங்க டர்ர்ர்ர் ஆகிடுவாங்க!
இதில் வரும் போர் விமானங்கள் யப்பா! என்று தலை கிறுகிறுக்க வைக்கிறது, இதை பார்த்தாலே எதிரி ஆள் பயத்திலே ஒண்ணுக்கு போய்டுவான் போல!
இவர்கள் "பண்டோரா" காட்டில் உள்ள தாவரங்கள், தரை பரப்பு, கொடிகள், பூச்சிகள் எல்லாம் மின்னுபவையாக சொர்க்கலோகம் போல காட்சி தருகின்றது.
படம் ஆரம்பித்து சாதாரணமாக செல்லும் படம் இந்த "பண்டோரா" காட்டை அடைந்தவுடன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்து செல்கிறது, மிகைப்படுத்தி கூறவில்லை.
இங்கு பெரிய பெரிய (என்றால் உங்கள் கற்பனையில் உள்ளதை விட பல பல மடங்கு பெரியது) மரங்கள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள், அந்தரத்தில் தொங்கும் மலைகள் என்று ஜேம்ஸ் கேமரூனின் (மற்றும் அவரது குழுவினர்) கற்பனை திறன் புகுந்து விளையாடி உள்ளது.
ஜேக் மற்றும் அவரது காதலி தங்களது டிராகானில் ஒரு பயணம் செல்வார்கள் பாருங்க! உண்மையில் நாமே அவர்களுடன் அமர்ந்து செல்வது போல இருக்கும்..மேலே இருந்து ஜிவ்வென்று கீழு தாறுமாறான வேகத்தில் செல்லும் போது நமது அடிவயிறு ஜிலீர் என்கிறது.
அவர்களை வேறு ஒரு பயங்கர டிராகன் துரத்தும் போது மரங்களுக்கு இடையே புகுந்து தப்பி செல்வார்கள், அவர்களுடன் நம்முடைய உடலும் வளைகிறது.. இதைப்போல அனுபவம் எனக்கு எந்த படத்திற்கும் கிடைத்தது இல்லை.
படைகள் இவர்களது ஒரு பகுதியை குண்டு போட்டு அழிக்க, அந்த அழகான அமைதியான இடம் நாசமாவதை கண்டு பொறுக்க முடியாமல் ஜேக்கின் காதலி கண்ணீர் விட்டு கதறும் போது நம்ம மனது கனத்து விடும்.
இவர்கள் அதி பயங்கரமான விமானங்கள் துப்பாக்கிகளை கொண்டு தாக்க, இந்த அப்பாவி நவிகள் வில் மற்றும் அம்பை வைத்து தாக்குவதை பார்க்கும் போது அடப்பாவமே! என்று இருக்கும்.. ஏன்யா! இப்படி பச்ச மண்ணை போட்டு அடிக்கறீங்க! என்று இருக்கும்.
இதில் கருப்பு புலி மாதிரி பயங்கரமாக வழுவழு தோற்றத்துடன் ஒரு மிருகம் இருக்கும்..அவ்வ்வ்வ் முடியல!
இது 3D படம் என்று அனைவருக்கும் தெரியும்! ஒரு இடத்தில் குண்டு வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், நான் பயந்து பின்னாடி நகர்ந்து விட்டேன்.. கலக்கல், ஆனால் இதைப்போல காட்சிகள் ரொம்ப குறைவு, நான் நிறைய எதிர்பார்த்தேன்.
"அவதார்" என்ற வார்த்தை இந்தியச்சொல்
படத்துல அப்ப குறையே இல்லையா! என்று நீங்கள் கேட்பது புரிகிறது..படத்தின் கதையே அரதபழசானது தான், அதை கூறிய விதம் தான் விஷயம்.
நவிகள் கூட ஆங்கிலம் பேசுகிறார்கள்.. :-o
இதைப்போல குறைகள் உண்டு ஆனால் அவை யாவும் படத்தின் தொழில்நுட்பத்தின் முன்பு அடிபட்டு விடுகிறது.
என்னங்க! நீங்க இப்படி படத்தோட காட்சிகளை கூறி விட்டீர்களே! சுவாராசியம் போய்டுமே! என்று நினைக்கவே தேவையில்லை.. காரணம் நீங்கள் தற்போது கற்பனை செய்து வைத்து இருக்கும் காட்சிகளை விட பல பல மடங்கு சிறப்பாக திரையில் காணலாம். நீங்கள் எதிர்பார்த்து செல்வதற்கு பல மடங்கு மேலே தான் காட்சிகள் இருக்கும். எனவே என்ஜாய் மாடி!
இது வரை படம் பார்க்காதவர்கள் படம் பார்க்கும் எண்ணம் இல்லாதவர்கள் கண்டிப்பாய் இந்த படத்தை பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்...படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இதில் உள்ள தொழில் நுட்பத்தை அவர்கள் 12 வருட உழைப்பை பார்க்கவாவது நீங்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும். படத்தை பிடிக்காதவர்கள் கூட இதன் தொழில்நுட்பத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது.
No comments:
Post a Comment