Monday, December 28, 2009

மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவியில் கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்?



மக்கள் மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவிப் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர்களான கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த சம்பவம் இந்தவார முற்பகுதியில் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதியின் அண்மையில் இருந்து இவர்கள் இராணுவமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இளம் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து அனாதரவான அவர்களின் குழந்தைகள் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடமாடுவதாகவும் குறித்த பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் அவர்களுக்கு உணவு வகைகளை வழங்கி வருவதாகவும் படையதிகாரிகள் குற்றம்சாட்டி வருவதாக அங்கு சென்று திரும்பிய அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் குறித்த இளம் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளுக்கு உணவை வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
வன்னியில் பல பகுதிகளில் முழுமையாக மக்கள் குடியமர்த்தப்படாத நிலையில் இந்தப் படுகொலையை யார் செய்திருக்கலாம் என உறுதிப்படுத்த முடியாத சூழலில் இந்த சம்பவம் அங்கு குடியிருக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேவேளை உயிரிழந்தவர்களின் சடலங்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அனாதரவான குழந்தைகள் அயலவர்களால் மீட்கப்பட்டு படையினர் ஊடாக வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------