போட்டியில் பலர் இருந்தனர்: ஆனால், முன்னணியில் இருவரே ஓடினர்.
இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியவர்கள்.
இருவரும்
ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை
நிராகரிப்பதற்காக, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம்
முடிவெடுத்தது.
இலங்கை வரைபடத்தில் இந்த இருவரும் வெற்றி பெற்ற
மாவட்டங்களுக்கு வெவ்வேறு வண்ணம் தீட்டினால் - அது ஒரு வரலாற்றுச்
செய்தியைச் சொல்லுகின்றது.

இலங்கைத் தீவு இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது என்பது தான் அது.
சிங்களப் பகுதியில் ஏகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளவர் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டுமே தெளிவாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்
பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றவர், அவரே ஒரு இனவாதியாக இருந்தும் கூட,
சிங்களப் பகுதியில் ஒரு மாவட்டத்தை கூட வெல்ல முடியவில்லை.
இந்தச் செய்தி இங்கு இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் முக்கியமானது.
தேர்தலைப் புறக்கணிப்பதை விடவும் வாக்குச் சீட்டை ஒர் ஆயுதமாக பயன்படுத்திய தமிழ் பேசும் மக்கள், இனவாதத்தை நிராகரித்துள்ளார்கள்.
தமிழ்
பேசும் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துவிடக் கூடாதென மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு நிர்பந்தங்களைத் தாண்டித் தான் அவர்கள் வாக்களித்தார்கள்; தங்கள்
மன நிலையை இவ்வாறு ஒரு வரலாற்று வரைபடம் ஆக்கினார்கள்.
கடந்த அரச
அதிபர் தேர்தலில் - தமிழ் பேசும் மக்களின் ஐனநாயக உரிமையைத் தடு்த்தவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தான் என கருத்துரைத்த அனைத்துலக சமூகம்
கவனத்தில் கொள்ள வேண்டிய இடம் இது தான்.
தமிழ் பேசும் மக்களின்
பிரதிநிதிகள் தங்களின் தேர்தல் கூட்டை அறிவித்த போதே, பேரினவாதம் திரண்டு
அடுத்த பக்கமாகச் சாயும் என்பது எளிமையான வாய்ப்பாடாகும்.
ஜனநாயகம் பற்றிப் போதிக்கும் அனைத்துலக சமூகம், மாறவே மாட்டாத
சிறிலங்காவின் "ஐனநாயகம்" பற்றிப் பாடம் படிக்க இதனை விடவும் வேறு ஒரு
சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?
வெற்றி பெற்றவர் வாக்கு
மோசடிகளைச் செய்தோ, இராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, முறைகேடாக நடந்தோ
வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் - வெற்றிக்
கோட்டினை வரைந்தது பேரினவாதம் தான்.
இந்த பேரினவாதம் - இலங்கைத்
தீவின் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியா மற்றும்
பன்னாட்டுச் சமூகத்தின் விருப்பிற்கு எதிராகவும் இந்த ஆணையை அளித்துள்ளது
என்பது தான் இங்கே உள்ள பெரிய செய்தி.
இது - அனைத்துலக சமூகத்திற்கு, தமிழ் பேசும் மக்கள் மக்களின் அரசியல் வேட்கையின் நியாயத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
அனைத்துலக
சமூகம் இதில் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் - 77 வீத ஒரே இனப்
பெரும்பான்மை கொண்ட, தனது நாட்டுப் படைகளி்ல் 99 வீதம் அதே இனத்து
ஆட்ளைக் கொண்ட சிறிலங்கா போன்ற போன்ற நாடுகளில் ஐனநாயகம் என்பது
செல்லுபடியற்றது என்பதைத் தான்.
இடம்பெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே பேரினவாத ஐனநாயகம் தான் வெல்லப் போகின்றது.
அறுபத்தி இரண்டு ஆண்டு கால வரலாறும் இது தான்.
அடிப்படையில்
- இலங்கைத் தீவு, இயல்பாக - இயற்கையாக - இரண்டாகவே பிளந்து கிடக்கின்றது;
ஆனால், பலவந்தமாக - செயற்கையாக - ஒன்றுபடுத்தப்பட்டு உள்ளது.
ஒரு
நீண்ட கால நோக்கில் அது எவருக்குமே - தமிழர்களுக்கோ, சிங்களவர்களுக்கோ,
இந்தியாவுக்கோ, அனைத்துலக சமூகத்திற்கோ - நன்மை பயக்காது.
தேர்தலில்
வெற்றி பெற்ற பின்னர் பேசிய மகிந்த ராஜபக்ச - தனக்கு மக்கள் அளித்துள்ள
இந்த மிகப் பெரிய ஆணை தான், தமது அரசு மீது போர்க் குற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று சொல்வோருக்கான பதில் என்று சொல்லியுள்ளார்.
அதாவது
- ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிராக அதே ஜனநாயகத்தைப் பாவிப்பதற்கான
அதிகாரத்தையே சிறிலங்காவில் ஜனநாயகம் ஒரு பேரினவாதிக்கு வழங்குகின்றது.
அதனால் - இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமெனில் - அதன் மீது
செல்வாக்குச் செலுத்த வேண்டுமெனில் - அதனைத் தங்கள் கையிற்குள்
வைத்திருக்க வேண்டுமெனில் - தேர்தல் ஐனநாயக வழிமுறைக்கு மாற்றாக வேறு
வழிமுறைளைக் கையாள்வது பற்றி உலக சமூகம் யோசிக்க வேண்டும்.
அவ்வளவு தான்.
No comments:
Post a Comment