Tuesday, January 5, 2010

டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்



டெங்கு நுளம்பார் பெருகின் வீடுகளில் உள்ளோர் அழிவர்.

உங்கள் வீட்டில் அல்லது அயலில் ஒருவருக்கு டெங்கு நோய் வந்திருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
அவரில் பசியாறுகிறார் ஒரு நுளம்பர்.
நோயாளி மருத்துவமனை சென்றுவிடுகிறார்.

மறுநாள் மீண்டும் பசியெடுத்த அதே நுளம்பர் உங்களுக்கு கடிக்கிறார்.

உங்களுக்கும் டெங்கு தொற்றுமா?

நிச்சயம் தொற்றாது!

தொற்றுவது எப்படி?

டெங்கு இரத்தத்தைக் குடித்திருந்தாலும் 7 நாட்கள் வரை டெங்கு கிருமியை அவரால் பரப்ப முடியாது.
காரணம் என்னவென்றால் நோயாளியிடம் குடித்த இரத்தத்தில் உள்ள அதே கிருமி நேரடியாக மற்றவர்களுக்குப் பரவுவதில்லை.
அதன் உடலில் பெருகி மீண்டும் மனிதர்களுக்கு தொற்றக் கூடிய நிலை ஏற்பட சுமார் 7 நாட்கள் செல்லும்.

ஆனால் அதற்கிடையில் உங்களையோ வேறு ஒருவரையோ கடிக்க முயலும் போது அடிப்பட்டுச் சாகும் சாத்தியம் நிறையவே உண்டு.

பதற்ற ஆசாமி

இந்த டெங்கு நுளம்பர் ஒரு பதற்ற ஆசாமி. அவர் ஒருவரிலிருந்து இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கையில், கடிபடுபவரின் உடலில் ஒரு சிறு அசைவு ஏற்பட்டாலும் தாங்க மாட்டார். பக்கெனப் பறந்து விடுவார். ஆனால் ஒரு சிறு வட்டம் அடித்துவிட்டு மீண்டும் பசியாற வருவார்.

நீங்கள் அவதானமாக இருந்து அடிக்க முற்பட்டால் தப்பிச் சிறகடிப்பார்.

ஆனால் பசியடங்கும் வரை சோம்பி இருக்கமாட்டார். வீட்டில் உள்ள மற்றொருவரையாவது பதம் பார்ப்பார்.

அதற்கிடையில் உங்கள் கை அவரது இரத்தத்தால் அசுத்தமானால் அதிஸ்டம் உங்கள் பக்கம்.

இவ்வாறு சுற்றிச் சுற்றிக் கடிக்கும் அந்த நுளம்பர் டெங்குவைப் பரப்பக் கூடிய நிலையில் இருந்தால் அதிஸ்டம் அவர்; பக்கம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆபத்துதான்.

ஆனால் ஒரு முறை வயிறு நிறையக் குடித்து விட்டால் ஆறுதல் எடுப்பார். தளபாடங்கள், திரைச்சீலை, விரித்திருக்கும் உடைகள், போட்டோ பிரேம் என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஹாயாக மறைந்திருப்பார்.

தூசி தட்டுவது, நுளம்பு ரக்கறை விசிறுவது போன்ற சிறு அசைவுகளும் அவரை பதற்றமுற்றுப் பறக்க வைக்கும். பக்கென அடித்துக் கொன்றுவிடுங்கள். சிறிய நுளம்பர் என்றபடியால் தெளிவாகத் தெரியாது. கவனமாக அவதானிக்க வேண்டும்.

நுளம்புப் பண்ணை

ஓரிரு நுளம்பென்றால் இவ்வாறு தொலைத்துவிடலாம். ஆனால் உங்கள் வீட்டிலேயே நுளம்புப் பண்ணை எனில் இது சாத்தியப்படாது.

கொழும்பில் குப்பை கூளங்களை அகற்றாததால்தான் நுளம்பு பெருகுகிறது என்று சொன்னார்கள். இப்பொழுது ஓரளவு இது சீரடைந்துவிட்டாலும் நுளம்பிற்கு குறைவில்லை. அது மட்டுமின்றி டெங்கு காய்ச்சலுக்கும் குறைவில்லை.

காரணம் என்ன? டெங்குவைப் பரப்பும் நுளம்பான Aedes aegypti இன்னும் தாரளாமாக உலவுகிறது என்பதுதானே?

காரணம் இவர் வீதியை விட வீட்டிலும் அதிகம் பெருகுபவர். சிரட்டை, பிளாஸ்டிக் டப்பிகள் ஆகியவற்றில் தங்கக் கூடிய சிறிதளவு நன்னீரில் இது உற்பத்தியாகிறது என்பது யாவரும் அறிந்த ரகசியம்.


ஆயினும் இது அசுத்தமான நீரிலும், சற்று உப்பு கரிக்கும் நீரிலும் கூட பெருகக் கூடும் என இப்பொழுது தெரிகிறது. முட்டைகளிலிருந்து பொரித்து நுளம்புகளாக மாறுவதற்கு 7 முதல் 9 நாட்கள் செல்லும்.


மலேரியாவைப் பரப்பும் Aanophleles மற்றும் யானைக் காச்சலைப் பரப்பும் Culicines நுளம்புகளோடு ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய நுளம்பாகும். இயற்கையான பாதுகாப்பான சூழலில் 60 நாட்கள் வரை வாழக் கூடியதாகும்.

குடும்பக் கட்டுப்பாடு அறியாதவர்

இந்த நுளம்பர் ஒரு தடவையில் 30 முதல் 100 முட்டைகள் வரை இடுவார். இவர் நீரில் முட்டை இடுவதில்லை. நீர் நிலைக்கு சற்று மேலாக ஈரலிப்பான இடத்தில்தான் இடுவர்.


நீர் பட்டதும் அதில் முட்டை மிதந்து 2-3 நாட்களில் குடும்பியாக (Larva) ஆக மாறும். வளர்ந்து பறக்கும் நுளம்பாக மாற மேலும் 5-9 நாட்களாகும். அதற்கிடையில் நீரை மாற்றிவிட்டால் நுளம்பாக கோலம் கொள்ளும் முன்னரே அழிந்துவிடும்.

அழிப்பது எப்படி?

முட்டையானது வளர்வதற்கான நீர் கிடைக்காவிட்டால் பல மாதங்கள் வரை அழியாமல் சீவிக்கும் வல்லமை கொண்டது. எனவே நீர் இருக்கும் நிலைகளான பூச்சாடிகள், டிரம், வீட்டு நீர்த் தொட்டிகள், நீர்த்தாவர வளர்ப்பிடங்கள் போன்றவற்றின் நீரை அடிக்கடி புதிதாக மாற்றுவது மட்டுமின்றி, பக்கங்களை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வதன் மூலம் அவற்றின் முட்டைகளை நீங்கள் அழிக்கலாம்.

நீங்கள் எதிர்பார்காத இடங்களிலும் இவர் முட்டையிட்டுப் பெருகுவார்.

பிளாஸ்டிக் கப், வெற்றுப் போத்தல்கள், மரப் பொந்துகள், எறும்பு ஏறாதிருக்க மேசை அடியில் வைக்கும் சிறு பாத்திர நீர், வாழை போன்றவற்றின் இலைகளிலுள்ள பள்ளங்களில் கூட முட்டையிடலாம் என்பதால் நீங்கள் தப்புவது அரிது!

ஆனால் முடியாததல்ல.

கள்வர் ஏறாதிருக்க சுவர்களில் பதித்திருக்கும் கண்ணாடிகள், கூரை நீர் இறங்கப் பதித்திருக்கும் பீலி என எங்கெல்லாம் நீர் ஏழு நாட்களுக்கு மேல் தேங்கி நிற்குமோ அங்கெல்லாம் பெருகுவார்.

எப்ப கடிப்பார்?

இது பொதுவாக காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரான 2 மணிநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக 2 மணிநேரத்திலும் இரத்தம் குடிக்கும் பழக்கம் உள்ள நுளம்பாகும்.

ஆயினும் பசியிருந்தால் ஏனைய நேரங்களில் இரத்தம் குடிக்கக் கூடாது என்ற சுயகட்டுப்பாடோ, கட்டளையோ எதுவும் நுளம்பிற்குக் கிடையாது.

பசித்தால் புசிக்கும் எந்நேரத்திலும்.

எனவே தொடர்ச்சியாக அவதானமாக இருக்க வேண்டியது எமது பொறுப்பாகும். டெங்கு நுளம்பானது மிருக இரத்தத்தையம் உறிஞ்சக் கூடும் ஆயினும் அதன் அபிமான உணவு மனித இரத்தம்தான்.

நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர் எனத் தலையங்கமிட்டதற்காக திருமூலர் என்னை மன்னிப்பாராக.


வீட்டார் விழிப்பின் நுளம்பார் அழிவர் எனத் தொடர்ந்து சொல்லலாமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------