Saturday, January 2, 2010

இன்று(சனவரி 2) கேணல் கிட்டு பிறந்த நாள்

[படம் 2ஆம் இணைப்பு] குழந்தைகளுக்கு கிட்டு மாமா, தோழர்களுக்கு கிட்டு, இயக்கப்பெயர் வெங்கிட்டு, இயற்பெயர் சதாசிவம் கிருஸ்ணகுமார். கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) என அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.

1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.

1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் ‘குவேக்கர்ஸ்’ இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.

கேணல் கிட்டு அண்ணை தேசியத்தலைவருடன்

தலைவருடன் கிட்டண்ணா

நன்றி :http://meenakam.com

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------