அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது!
தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன.
இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல.
பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம்.
அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு.
எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள்.
ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும்.
அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம்.
ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி.
அடுத்த முறை வரும்போதுதான் மீண்டும் இப்பிரச்சனை பற்றி சிந்திப்பார் போலும்.
வயது நாற்பது ஏற்கனவே நீரிழிவும் பிரஸரும் வந்து விட்டன.
அதீத எடை என்பது உலகளாவிய ரீதியில் சவாலான ஆரோக்கியப் பிரச்சனையாக உருவாகிவருகிறது. அதீத எடையை எப்படிக் கண்டறிவது?
கண்ணால் காண்பதும் பொய் என்பார்கள்.
அதீத எடை என்பது உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ கண்ணால் பார்த்துச் சொல்லும் கருத்து அல்ல.

அவ்வாறு கணிப்பதை உடற்திணிவு (Body Mass Index) என்பதாகக் குறிக்கிறார்கள். இது எடையை கிலோகிராமில் அளந்து அதனை, மீட்டறில் எடையின் வர்க்கத்தால் பிரிக்க வருவதாகும் (BMI=Kg/m2).
உடற்திணிவு
30க்க மேலிருந்தால் அது (body-mass index >30 kg/m2) அதீத எடை எனச் சொல்லப்படுகிறது.
25 முதல் 30ற்குள் இருந்தால் அதிக எடை (Over Weight) எனலாம்.
ஆயினும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்
ஆரோக்கியமான எடை என்பது
உடற்திணிவில் 23ற்குள் இருக்க வேண்டும்.
அதீத எடையே பல்வேறு விதமான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
அத்துடன் இருதய நோய்கள், நீரிழிவு, எலும்புத் தேய்வு நோய் போன்றவற்றுடன் நேரடியாகவும் தொடர்புள்ளதாக இருக்கிறது.
இப்பொழுது ஒரு ஆய்வு அதீத எடைக்கும் புற்று நோய்க்கும் தொடர்புள்ளது என்கிறது. இது ஏதோ ஒரு சிலரில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல. ஐம்பதிற்கும் அறுபத்து நான்கு வயதிற்கும் இடைப்பட்ட 1.2 மில்லியன் பெண்களில் 5 முதல் 7 வருடங்களுக்குச் செய்யப்பட்டது.

கருப்பை, சிறுநீரகம், சதையம், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களிடையேயான மார்புப் புற்று நோய்,
மாதவிடாய் நிற்காத பெண்களிடையேயான மலக்குடல் புற்றுநோய், களப்புற்று நோய்,
லியூக்கிமியா எனப்படும் குருதிப் புற்றுநோய்,
மல்ரிப்பிள் மையலோமா,
நொன் ஹொட்ஸகின் லிம்போமா
ஆகியன அவ்வாறு எடையுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட புற்று நோய்களாகும்.
கலவரமடையாதீர்கள்.
இதன் அர்த்தம் என்ன?
எடை அதிகரித்தால் புற்றுநோய் கட்டாயம் வரும் என்பதா?
அப்படியல்ல!
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதிலும் முக்கியமாக முன்பு சொல்லப்பட்ட புற்றுநோய்கள் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்பதாகும்.
இது பெண்களில் செய்யப்பட்டது.
ஆண்களிலும் 25 வயதிற்கு மேற்பட்ட இள வயதுள்ளவர்களிலும் செய்யப்பட்ட இன்னுமொரு ஆய்வும் அதீத எடைக்கும் சிலவகைப் புற்றுநோய்களுக்கும் இடையே தொடர்புள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
எனவே எடையை அவதானியுங்கள்.
பிற்காலத்தில் வரக் கூடிய புற்றுநோய்க்காக மட்டுமல்ல மிகவிரைவில் வந்து உங்கள் வாழ்வின் எல்லையைக் குறுக்கப்போகிற நீரிழிவு, பிரஸர், மாரடைப்பு போன்றவற்றைத் தடுப்பதற்காகவுமே.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
ஆதாரம்:- Journal Watch General Medicine December 6, 2007
நன்றி:- தினக்குரல்
No comments:
Post a Comment