Sunday, April 4, 2010

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்!

வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது தமிழ் உச்சரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் மக்களைத் திட்டினார் ராஜபக்சே. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில் இலங்கை ஐனாதிபதி டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழில் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார். தப்பும் தவறுமாக அவர் பேசியது தமிழ்தானா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.

ஒரு பக்கம் வறுத்தெடுக்கும் வெயில், மறுபக்கம் அதைவிட கொடூரமான ராஜபக்சேவின் தமிழ் உச்சரிப்பு. எனவே மக்கள் கூச்சலிட்டவாறு இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்ஷே கடுமையான சொற்களால் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பதிவு செய்யப்பட்ட ராஜபக்சேவின் ஆடியோ பேச்சு இது:

“நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். இப்படித்தான் பேசுவேன். அதனால் கேட்டுக் கொண்டு இருங்கள். நான் நிறுத்தவே மாட்டேன். நீங்கள் சத்தம் போடப் போட இன்னும் இன்னும் நான் தமிழில் பேசத்தான் போகிறேன். தமிழா… தலைதெறித்து நடந்துகொள்ளாமல்…. கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ” என்றார். அவர் இப்படிச் சொன்னபோது கடுமையாக சத்தமெழுப்பினர் கூடியிருந்த தமிழர்கள் .

இத்தனைக்கும் இவர்கள் டக்ளஸ் தேவானந்தாவால் கூட்டிவரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

400 பேரே வந்த்தால் நொந்துபோன ராஜபக்சே!

முன்னதாக தேர்தல் பிரசாரத்திற்காக வந்த ராஜபக்சே அங்கு வெறுமனே 400 பேர் மட்டுமே கூடியதால் கடுப்பாகிப் போனாராம்.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்தவரை இலங்கை அதிபர் ராஜபக்சே யாழ்ப்பாணம் செல்லாமல் இருந்தார்.

போரில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் ராஜபக்சே யாழ்பாணத்துக்கு வந்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆண்டுகள் கழிந்து கால் வைத்த ராஜபக்சே அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக வந்தார்.

இதையடுத்து வரும் 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி, யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மத்தியில் ஓட்டு சேகரிக்க ராஜபக்சே கடந்த வியாழக் கிழமை வந்தார்.

அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மிகவும் சிரமப்பட்ட போதிலும், ராஜபக்சேவின் பிரச்சார கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்க முடியவில்லை.

மிக சிரமப்பட்டு கொஞ்சம் பேர் அழைத்துவரப்பட்டு கூட்டமாக காட்டப்பட்டனர். ஆனால் கூட்டம் நடந்த பகுதியில் உள்ளவர்களை எண்ணினால் வரக்கூடிய எண்ணிக்கை, பாதுகாப்புக்கு வந்திருந்த தலைகளை சேர்த்து, 400ஐ கூட தாண்டவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இந்த 400 பேரையும் இரு பக்கமும் வெயிலில் நிறுத்தி வைத்திருந்தனர். அதுவும் ராஜபக்சேயின் மேடையிலிருந்து 200 அடி தூரத்தில்!

பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்து வரப்பட்ட மக்களை மைதானத்துக்குள் அனுமதிக்கும் முன்பு முழு பரிசோதனைகள் பல்வேறு கட்டங்களாக செய்த பின்னரே அனுமதித்தார்களாம்.

துரையப்பா மைதானத்தில் நடந்த இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மக்களே வாராததைப் பார்த்த பார்த்து ராஜபக்சே மிகவும் ‘அப்செட்’ ஆகிவிட்டாராம்.

இறுக்கமான முகத்துடன் பேசிய ராஜபக்சே, அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு, வழக்கமான நலத் திட்ட வாக்குறுதிகளை கொடுத்துவிட்டுப் போனார்.

முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் நல்லூர் கல்வித் துறை விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கிய ராஜபக்சே, அருகில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

பின்னர் நாக விகாரையில் உள்ள புத்தர் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். பிரச்சார மேடை அமைக்கப்பட்டிருந்த துரையப்பா மைதானத்துக்கு பாதுகாப்பு வளையத்துடன் வந்தார் ராஜபக்சே.

பிரச்சாரக் கூட்டத்தில் பொது மக்களை காட்டிலும் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும், ராஜபக்சே உடன் வந்தவர்களுமே அதிகமாக இருந்தனராம்.

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------